இந்தியாவில் பா.ஜ.க மீண்டும் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து வருகிறது. மேலும் பொருளாதாரத்தைச் சமாளிக்கும் நோக்கில் அரிசிக்கு எல்லாம் ஒன்றிய அரசு ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளது.
ஆனால் மக்கள்தான் பாதிக்கப்படுகிறோர்களே தவற பொருளாதாரம் உயரவில்லை. நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்தேதான் வருகிறது. இந்நிலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்து வருகிறது. நேற்று இந்திய ரூபாய் மதிப்பு ரூ.83.6 என்ற நிலையிலிருந்துள்ளது.
இந்த சரிவிலிருந்து மீள்வதற்குப் பொருளாதார அறிஞர்கள் பலரும் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள். ஆனால் ஒன்றிய அரசு எதையும் காது கொடுத்து கேட்காமல் இருந்து வருகிறது. இந்நிலையில், இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியைத் தடுக்க வேண்டும் என்றால் பொருளாதார நிபுணர்களுடன் உடனடியாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்த வேண்டும் என முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டரில், "அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. இந்த நேரத்தில் அரசாங்கத்தின் அனைத்து அனுபவங்களையும் பயன்படுத்த வேண்டும்.
இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியில் தீர்வுகாண பிரதமருக்கு நான் கூறுவது என்ன வென்றால், டாக்டர் சி.ரங்கராஜன், டாக்டர் ஒய் வி ரெட்டி, டாக்டர் ராகேஷ், டாக்டர் ரகுராம் ராஜன், மாண்டேக் சிங் அலுவாலியா போன் நிபுணர்களுடன் உடனடியாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தித் தீர்வு காணவேண்டும்" என தெரிவித்துள்ளார்.