பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில் பா.ஜ.க.வின் கூட்டணி கட்சிகளிடையே விரிசல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் சமீபத்தில் பீகாரில் பா.ஜ.க கூட்டணி ஆட்சி முற்றிலும் முறிந்துள்ள சம்பவம் அரங்கேறியது.
கடந்த 2020ம் ஆண்டும் நடந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. இதில் பா.ஜ.கவுக்கு 74 இடங்களும், ஐக்கிய ஜனதா தளம் 43 மற்றும் மற்றக் கூட்டணி கட்சிகள் 8 இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கப்பட்டது.
எதிரணியில் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) 75, காங்கிரஸ் 19, கம்யூனிஸ்ட் கட்சிகள் 16 இடங்களில் வெற்றி பெற்றன. மேலும் தனித்துப் போட்டியிட்ட ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி 5 தொகுதிகளை கைப்பற்றியது. தேர்தலுக்குப் பிறகு ஒவைசியின் 4 எம்.எல்.ஏ.க்கள், ஆர்.ஜே.டி.யில் இணைந்தனர்.
இதனிடையே அதிக இடங்களை கைபற்றிய பா.ஜ.க முதலமைச்சர் பதவி வேண்டும் என அழுத்தம் கொடுத்தது. ஆனால், நிதிஷ்குமார் அனுமதிக்காததால் அவரையே முதல்வராக்க பா.ஜ.க ஒப்புக்கொண்டது. மேலும் துணை முதலமைச்சர் பதவி பா.ஜ.கவுக்கு கிடைத்தது.
ஆனால், இந்த பிரச்சனையில் இருந்து இரு கட்சிகளிடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்துவந்தது. மேலும் நிதிஷ்குமார் மீது ஊழல் குற்றச்சாட்டை பா.ஜ.க தொடர்ந்து கூறிவந்த நிலையில், இந்த கூட்டணி விவகாரம் பட்டவர்த்தமாக வெளிப்பட்டது.
மேலும் ஐக்கிய ஜனதா தளத்தில் பிளவை ஏற்படுத்த பா.ஜ.க முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், பா.ஜ.க., ஜே.டி.யூ ஆட்சியை முறித்துக்கொள்வதாக நிதிஷ்குமார் அறிவித்தார். அதனைத்தொடர்ந்து லாலு பிரசாத்தின் ஆர்.ஜே.டி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுடன் இணைந்து புதிய ஆட்சியை அமைக்கவுள்ளதாக அறிவித்தார்.
அதன்படி ஆர்.ஜே.டி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணி கட்சிகள் தலைமையில், பிஹார் மாநில முதல்வராக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். நிதிஷ் குமாரைத் தொடர்ந்து மாநிலத்தின் துணை முதல்வராக ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றுக் கொண்டார்.
பா.ஜ.க கூட்டணி அமைக்கும் இடங்களில் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி அந்த ஆட்சியை கவிழ்த்துவிட்டு, பா.ஜ.க ஆட்சியை அமைப்பதே அவர்களையே வேலையாக இருந்த நிலையில், பா.ஜ.கவின் வியூகத்தை முறியடித்து நிதிஷ்குமார் எடுத்த முயற்சிக்கு பலரும் பாராட்டைத் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், அம்மாநிலத்தில் நடைபெற்ற கல்லூரி விழாவில் முதலமைச்சர் நிதிஷ்குமார் கலந்துக்கொண்டார். அப்போது பேசிய நிதிஷ் குமார், பா.ஜ.கவில் வாஜ்பாய், எல்.கே.அத்வானி காலத்தை நினைவு கூர்ந்தார். ஆனால் தற்போது உள்ள பா.ஜ.க தலைமையிடம் ஆவணம் மட்டுமே உள்ளது.
மேலும் இப்போது உள்ளவர்கள் யாருக்கும் மரியாதை கொடுப்பதில்லை. அதனால் நான் உயிரோடு இருக்கும் வரை பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டேன். 2024ல் மோடி அரசுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைப்போம் எனத் தெரிவித்துள்ளார்.