ஜம்மு-காஷ்மீர் பகுதியில் 3 நாட்களுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த பகுதியிலுள்ள சிறைத்துறை டிஜிபி ஹேமந்த் குமார் லோஹியா என்பவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் சிறைத்துறை டிஜிபி-யாக பணிபுரிந்து வந்தவர் ஹேமந்த் குமார். இவரது வீட்டில் கட்டுமான பணிகள் நடந்துகொண்டிருப்பதால் தனது நண்பர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை அவரது நண்பர் வீட்டில் அவரது கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக கிடந்துள்ளார்.
பின்னர் தகவலறிந்து வந்த அதிகாரிகள் உடலை மீது உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவரது உடலில் தீக்காயங்கள் இருப்பதும், அவர் மூச்சுத்திணறி இறந்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து விசாரணை மேற்கொண்டபோது டிஜிபி-யின் நண்பர் வீட்டில் வேலை செய்து வந்த யாசிர் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.
இதனால் யாசிர் கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறைக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் அவரது கழுத்தை வீட்டிலிருந்த கெச்சப் பாட்டிலை கொண்டு அறுக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது இந்த விவகாரம் தொடர்பாக இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் டிஜிபி கொலைக்கும் தீவிரவாத அமைப்புகளுக்கு தொடர்பில்லை என்றும் காவல்துறை தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா 3 நாட்கள் சுற்றுப்பயணமாக அங்கு சென்றுள்ள நிலையில், நேற்று இரவு அந்த பகுதி சிறைத்துறை டிஜிபி கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.