உத்தரபிரதேச மாநிலம் அவுரியா பகுதியிலுள்ள வைஷோலி என்ற கிராமத்தில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. பல்வேறு மாணவர்களும் படித்து வரும் இந்த பள்ளியில் நிகித் குமார் என்ற 15 வயதுடைய மாணவர் ஒருவர் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக அஷ்வினி சிங் என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆசிரியர் மாணவர்களுக்கு வகுப்புத்தேர்வு நடத்தியுள்ளார். அப்போது இந்த தேர்வில் மாணவர் நிகித் விடையை தவறாக குறிப்பிட்டுள்ளார். அதோடு ஒரு வார்த்தையில் எழுத்துப்பிழையும் இருந்துள்ளது.
இதைக்கண்டதும் ஆசிரியர் கோபத்தில் மாணவனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் தாக்குதல் தாங்க முடியாத மாணவன் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்துள்ளார். இதையடுத்து சக ஆசிரியர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவ செலவையும் இந்த ஆசிரியர் ஏற்றுக்கொண்டாலும் மாணவனின் பெற்றோரை சாதி ரீதியாக மட்டமாக பேசியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மாணவன் நிகித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து ஆசிரியர் தாக்குதலில் உயிரிழந்த மாணவனின் குடும்பத்தினர், தலித் அமைப்புகள் ஆசிரியரை கண்டித்து போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தி ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு அந்த ஆசிரியரை பணி இடைநீக்கம் செய்து அம்மாநில கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.