மஹாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் அஜய் (வயது 19) இளைஞர் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் இருப்பதால் குடும்ப வறுமைக்காக இந்த இளைஞர் டெலிவரி வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இந்த இளைஞர் டெலிவரி முடித்துவிட்டு வீடு திரும்பியபோது ஹிராநந்தனி எஸ்டேட் என்ற பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், இவர் மீது காரை ஏற்றியுள்ளார். இதில் கீழே விழுந்த அஜய்க்கு பலத்த காயம் ஏற்பட்டதை கண்ட அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் அந்த பெண் அந்த இடத்திலிருந்து தப்பியோடிவிட்டார்.
அங்கே பரிசோதித்த மருத்துவர்கள் அஜய்க்கு பின் தலை மற்றும் மூக்கு பகுதிகளில் அடிபட்டதில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து இது குறித்து காவல்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் அவர்கள் வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது விபத்து நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியின்மூலம் அந்த பெண் இடித்தது உறுதியானது.
இதையடுத்து அந்த பெண் ரோடாஸ் என்க்ளேவ் வுட் பார்க் என்ற பகுதியில் குடியிருப்பதாக அங்கிருந்தவர்கள் கூறவே, அவர்கள் விசாரித்தனர். அப்போது அந்த பெண்ணிடம் ஓட்டுநர் உரிமும் (License), பயிற்சி உரிமும் (LLR) இல்லை என்று தெரியவந்தது. மேலும் அவர் வரும்போது பிரேக் பிடிப்பதற்கு பதில் க்ளெட்சை மிதித்ததால் இந்த விபத்து நேர்ந்தது என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதனிடையே கொலை செய்த அந்த பெண், தனது வழக்கறிஞருடன் முன் ஜாமீன் எடுத்துக்கொண்டு காவல்நிலையத்திற்கே சென்றுள்ளார். இதனால் அவரை கைது செய்யவில்லை என்று காவல்துறை கூறினர். 40 வயதுடைய பெண் ஒருவர் எந்த ஒரு உரிமமும் இல்லாமல் காரை எடுத்து சென்று இளைஞர் மீது மோதி கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.