தெலங்கானா மாநிலத்தில் பணி முடித்து ஜமால் ஷாஹித் (வயது 42) என்பவர், வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது வல்லபாய் என்னும் கிராமத்தின் வழியாக அவர் சென்றபோது சாலையோரத்திலிருந்த இருவர் லிப்ட் கேட்டுள்ளனர்.
அவர்களுக்கு லிப்ட் கொடுக்க ஜமால் நின்றபோது அதில் ஒருவர் மட்டும் பைக்கில் ஏறிக்கொண்டார். இருவரும் சிறுது தூரம் சென்றநிலையில், ஜமாலுக்கு பின்னால் இருந்த நபர் திடீரென ஒரு ஊசியை எடுத்து ஜமாலை குத்தியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஜாமால் வண்டியை நிறுத்தியநிலையில், பின்னால் அமர்ந்திருந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். ஏதோ தவறாக நடப்பதை உணர்ந்த ஜமால் சுமார் 400 மீட்டர் பைக்கில் பயணம் செய்து அங்கிருந்த நபர்களிடம் தனக்கு நேர்ந்ததை கூறி அங்கேயே மயக்கமடைந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள் ஜாமலை உடனடியாக அங்கிருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலிஸார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கை விசாரிக்க இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் நடந்தது கிராமப்பகுதி என்பதால் அங்கு எந்த ஒரு சிசிடிவி காமெராவும் இல்லை என்றும் போலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.