நாம் வங்கி, நகை, ஆடு, மாடு, இருசக்கர வாகனம் போன்ற பல விதமான திருட்டு சம்பவங்களைக் கேள்விப் பட்டிருப்போம். ஆனால் ஹரியானா மாநிலத்தில் நடந்த ஒரு திருட்டு சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஹரியானா மாநிலம் யமுனாநகர் பகுதியில் சஹாரன்பூர்-பஞ்ச்குலா தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் ஒன்று உள்ளது. இந்த மேம்பாலத்தில் இருந்து 4000 நட்டுகள் மற்றும் போல்ட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இந்த மேம்பாலத்தை பொறியாளர்கள் திடீரென ஆய்வு செய்தபோதுதான் நட்டு மற்றும் போல்டுகள் காணாமல் போன சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து இந்த மேம்பாலத்தைக் கட்டிய நிறுவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் மேம்பாலத்தில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து நெடுஞ்சாலைத் துறையிடம் இருந்து இதுவரை புகார் எதுவும் அளிக்கப்படவில்லை என காவல்துறை அதிகாரி தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
ஹரியானா மேம்பாலம் ஒன்றிலிருந்து 4000 நட்டு, போல்டுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.