இந்தி பேசாதா மாநிலங்களில் இந்தி மொழியை எப்படியாவது திணிக்க வேண்டும் என ஒன்றிய அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. குறிப்பாக ஒன்றிய அரசு அலுவலர்களுக்கு இந்தி மொழியிலேயே கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு உள்ளிட்ட நாடளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்தியில் கடிதங்களை ஒன்றிய அரசு அனுப்பியுள்ளது. ஒன்றிய அரசின் இந்த இந்தி திணிப்புக்குத் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஒன்றிய அரசின் இந்த செயல்பாடுகள் காரணமாக இந்தி தெரியாதவர்களை அவமானப்படுத்தும் போக்குகள் அவ்வப்போது நடந்து வருகிறது. தற்போது இண்டிகோ விமானத்தில் இந்தி தெரியாத பயணியின் இருக்கையை ஊழியர் மாற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து அந்த விமானத்தில் பயணித்த சக பயணியான தேவஸ்மிதா சக்ரவெர்தி என்பவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்,"ஆந்திரா விஜயவாடாவில் இருந்து ஐதராபாத்திற்குச் செப்டம்பர் 16ம் தேதி இண்டிகோ விமானத்தில் 2A இருக்கையில் பெண் ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது விமான ஊழியர் ஒருவர் அந்த பெண்ணுக்கு இந்தி மற்றும் ஆங்கிலம் தெரியாததால் அவரை 3c இருக்கைக்கு மாற்றி அமரவைத்தார்" என தெரிவித்துள்ளார். மேலும் இந்த பதிவை ஒன்றிய விமான போக்குவரத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவிற்கும் டேக் செய்துள்ளார்.
தற்போது இவரின் பதிவு வைரலாகி வருகிறது. மேலும் இண்டிகோ நிறுவன ஊழியரின் இந்த மொழி பாகுபாட்டிற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.