உத்தர பிரதேச மாநிலம் அலிகார் பகுதியை சேர்ந்தவர் 35 வயதுடைய பெண். முன்னாள் இராணுவ வீரரின் மனைவியான இவர், தனக்கு சுமார் 7 வயதில் இருந்து 19 வயது வரை உறவினர்களால் நடந்த பாலியல் வன்கொடுமைகளை பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். முதலில் காவல்துறை அந்த புகாரை பெற்றுக்கொள்ளாததால், தேசிய பெண்கள் ஆணையத்தில் புகார் அளித்தார்.
அவர் அளித்த புகாரில், "எனக்கு சிறு வயதாக இருக்கும்போது, என் தாய் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். அதன்பின் எனக்கு 7 வயதாக இருக்கும்போது எனது தாயின் இரண்டாவது கணவரின் உறவினர்களில் ஒருவர் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்.
இதனால் நான் கடுமையான வயிற்று வலியோடு எனது தாயிடம் கூறினேன். ஆனால் அவரோ இது குறித்து வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று என்னை மிரட்டி, வயிறு வலி மாத்திரை கொடுத்தார். அதன் பின்னர் மீண்டும் வேறொரு உறவினரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானேன். அப்போதும் தாயிடம் கூறியபோது யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டினார்.
இதனால் பயந்து நான் எவரிடமும் கூறாமல் இருந்தேன், ஆனால் எனது 2-வது தந்தையின் மற்றொரு உறவினரால் மீண்டும் பாலியல் வன்கொடுமையை அனுபவித்தேன். இப்படி எனது 19 வயது வரை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டேன்.
பின்னர் எனக்கு 2011-ம் ஆண்டு திருமணமானது. அப்போது எனது தாயின் வீட்டிற்கு சென்றபோது கூட அவரது உறவினர் ஒருவர் என்னை வன்கொடுமை செய்தார். அதோடு நான் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகும் என்னை அவர்களில் சிலர் விடவில்லை. இதனால் வேறு வழியின்றி எனது கணவரிடம் தெரிவித்தேன்.
அவர் எனக்கு உறுதுணையாக இருப்பதாக கூறியதையடுத்து நாங்கள் எனது பெற்றோரிடமும் உறவினரிடமும் சென்று ஞாயம் கேட்டோம். ஆனால் அவர்கள் எனது கணவரை அடித்து வெளியே அனுப்பினர். மேலும் எனது தாயும் உறவினர்களுக்கு தான் துணையாக இருக்கிறார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் " என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து அவர்கள் மீது 376 (வன்கொடுமை), 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), 504 (அமைதியை மீறும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பு), மற்றும் 506 (குற்றம் சார்ந்த மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் FIR பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.