கர்நாடக மாநிலத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. குறிப்பாக பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அதிலும் சென்ட்ரல் சில்க் போர்டு சந்திப்பு முதல் கிருஷ்ணராஜபுரம் சந்திப்பு வரை சுமார் 17 கி.மீ புறநகர் வட்டச்சாலை சாலையில் 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அமைந்துள்ளது. இந்த பகுதி முழுவதும் தற்போது மழை நீரால் மூழ்கியுள்ளது. இப்பகுதியில் மழைநீர் கால்வாய், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யாததே இந்த நிலைக்கு காரணம் என கூறப்படுகிறது.
இந்த மழை வெள்ளம் காரணமாக ஐ.டி நிறுவனங்களுக்கு மட்டும் ரூ.225 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவில்லை என்றால் தங்களது நிறுவனத்தை வேறு இடத்துக்கு மாற்றுவோம் ஐ.டி நிறுவனங்கள் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் எழுதியுள்ளன.
இது தவிர தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் அகிலா என்ற இளம்பெண் மழை வெள்ளத்தில் சென்றபோது மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். மழை வெள்ளம் மற்றும் உயிரிழப்புகள் காரணமாக அரசுக்கு எதிரான விமர்சனம் அதிகரித்தது.
கடந்த 40 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு தற்போது அதிக மழை பெய்து வருவதால், ஆங்காங்கே மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அதோடு வேலைக்கு செல்லும் பணியாளர்கள் டிராக்டர்கள், படகுகளை வரவழைத்து அவற்றின் உதவியுடன் அலுவலகத்திற்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், கர்நாடகாவில் தொடர்ந்து அதிலும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருவதால் அம்மாநிலத்திற்கு 'மஞ்சள் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்புடன் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கர்நாடக மக்கள் இப்படி வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கும் நிலையில், பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பியும், பா.ஜ.க-வின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான தேஜஸ்வி சூர்யா, ஊர் சுற்றி விட்டு சாப்பிடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் அவரை விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.