கேரளா மாநிலம் முழுவதும் தற்போது ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு அங்கிருக்குக்கும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து வளாகங்களிலும் மாணவிகள் வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் அங்கிருக்கும் அரசுப்பள்ளி ஒன்றில் நேற்றைய முன்தினம் இந்த பண்டிகையை மாணவிகள் கொண்டாடி வந்தனர். அப்போது அங்கு படிக்கும் 10-ம் வகுப்பு மாணவிகள் 6 பேர் கொண்ட கும்பல் கழிவறையில் நின்று சிகெரட் பிடித்து கொண்டிருந்தனர். ஒரு சிகரெட்டை மாறி மாறி பிடித்து கொண்டிருப்பதை எதேர்ச்சியாக அங்கு வந்த 7-ம் வகுப்பு மாணவி ஒருவர் பார்த்துள்ளார்.
ஜுனியர் மாணவி தங்களை பார்த்ததை கண்டதும் அதிர்ச்சியடைந்த அவர்கள், அந்த சிறுமியை பிடித்து மிரட்டியுள்ளனர். மேலும் இதை வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்று கூறி, அவரது இடதுபக்க தலைமுடியையும் வெட்டி எடுத்துள்ளனர்.
இதனால் மிகவும் வேதனையடைந்த 7-ம் வகுப்பு சிறுமி, அழுதுகொண்டே தலையில் முக்காடு அணிந்து தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சிறுமி முக்காடு அணிந்திருப்பதை கண்ட அவரது பெற்றோர் விசாரித்துள்ளனர். உடனே அந்த சிறுமி அழுதுகொண்டே தனக்கு நடந்தவற்றை கூறியுள்ளார்.
இதையடுத்து அவரது பெற்றோர், பள்ளி நிர்வாகம், குழந்தைகள் நல கவுன்சில், காவல்துறை ஆகியோருக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவிக்குக் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் சம்பந்தப்பட்ட பள்ளி மீதும், மாணவிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பள்ளியில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.