கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியில் முருக மடத்தின் மடாதிபதியாக இருப்பவர் சிவமூர்த்தி முருக சரணரு. இவரது மடம் சார்பில் விடுதியுடன் கூடிய பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பல்வேறு மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், இங்கு படிக்கும் 10-ம் வகுப்பு மாணவிகள் இரண்டு பேரை, மடாதிபதியாக சிவமூர்த்தி கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துவந்ததாக பாதிக்கப்பட்ட மாணவிகள் மைசூரில் உள்ள அரசு சாரா சமூக சேவை அமைப்பில் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து மடாதிபதி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த அதிகாரிகள், நேற்று இரவு அவரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே மடாதிபதிக்கு உடந்தையாக இருந்ததாக அந்த பள்ளியின் வார்டன் ராஷ்மி, பசவதித்தியா, பரமசிவன், கங்காதரய்யா ஆகியோர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மடாதிபதி சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது தொடர்பாக தேசிய குழந்தைகள் ஆணையம், தானாக முன் வந்து வழக்குப் பதிவு செய்து, விசாரணையை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக மருத்துவப் பரிசோதனை, முதல் தகவல் அறிக்கை, போலீஸ் விசாரணை உட்பட அனைத்து தகவல்களையும் 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிகள் குறித்த அடையாளங்களை வெளியிட கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது. பாலியல் குற்றச்சாட்டில் கைதான மடாதிபதி தற்போது நெஞ்சுவலி இருப்பதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.