பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த சுனிதா என்பவர் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கும்லாவில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்தார். இவர் ஜார்கண்ட் மாநிலத்தின் ஓய்வுபெற்ற IAS அதிகாரியின் மனைவியும், பாஜக பிரமுகருமான சீமா பத்ரா என்பவரின் வீட்டில் வேலை செய்துவந்தார்.
அந்த இடத்தில் வேலை செய்துவந்தபோது சீமா பத்ரா அவரை கொடூரமாக தாக்கி வந்துள்ளார். ஒரு முறை தனது சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று சுனிதா கேட்டபோது சுனிதாவின் உடலில் சூடான சட்டி மூலம் பலமுறை சூடு வைத்துள்ளார். மேலும் அவரை அடித்து உதைத்து ஒரு அறையில் அடைத்துவைத்துள்ளார்.
அந்த அறையில் இருந்து சுனிதாவை வெளியேற சீமா பத்ரா அனுமதிக்கவில்லை. அங்கு சிறுநீர் இருந்தால் அதை வாயால் சுத்தம் செய்ய வேண்டும் போன்ற கொடுமைகளை சுனிதா அனுபவித்து வந்துள்ளார். தனக்கு நடந்த இந்த கொடுமை குறித்து சுனிதா வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இதன் மூலம் இந்த கொடூர செயல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியதால், ராஞ்சியில் உள்ள அசோக்நகரில் உள்ள பாஜக தலைவரின் இல்லத்தில் இருந்து சுனிதாவை போலிஸார் விடுவித்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த நிலையில், சுனிதாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் அனுபவித்த மேற்கூறிய கொடுமைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அவரின் வாக்குமூலத்தில், சீமா பத்ராவின் மகன் ஆயுஷ்மா சுமிதாவுக்கு நடந்த கொடுமைகள் குறித்து எதிர்ப்பு தெரிவித்தபோது அவரை மனநோயாளி என்று கூறி மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சுனிதா கூறியுள்ளார். இந்த வழக்கில் பாஜக பிரமுகர் சீமா பத்ரா கைது செய்யப்படாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.