இஸ்ரேல் பாதுகாப்புத் துறையின் ஒரு பிரிவான என்எஸ்ஓ (NSO) நிறுவனத்தின் தயாரிப்பு பெகாசஸ் உளவு மென்பொருள். இந்நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரின் செல்போன் தகவல்கள் திருடியதாக அமெரிக்க ஊடகங்கள் குற்றம்சாட்டின.
இந்தியாவிலும் பத்திரிகையாளர்கள், ஒன்றிய அமைச்சர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் செல்போன்கள் இந்த மென்பொருள் மூலம் கண்காணிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்துக் கடந்த ஆண்டு நடைபெற்ற மழைக்காலக் கூட்டத் தொடரிலும் எதிர்க்கட்சிகள் கடுமையாகக் கேள்விகளை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 3 பேர் கொண்ட தனி விசாரணைக்குழு அமைத்தது அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் பெகாசஸ் வழக்கு விசாரணை இன்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வுக்கு வந்தது. அப்போது ஓய்வு பெற்ற நீதிபதி ரவீந்தரன் தலைமையிலான விசாரணை குழுவினர் தங்களது அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றம் ஆய்வு செய்தது.
அந்த அறிக்கையில், "பெகாசஸ் வழக்கில் விசாரணை நடத்த ஒன்றிய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை. விசாரணை அறிக்கை கவலை அளிப்பதாக உள்ளது. 29 தொலைபேசிகளில் 5 தொலைபேசிகளில் உளவு மென்பொருள் கண்டறியப்பட்டுள்ளது.
பொதுமக்களின் தனி உரிமை மீறப்பட்டுள்ளது. தடுப்பதற்கான பரிந்துரைகளும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக உளவு பார்க்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொலைபேசி ஒட்டுக்கேட்பு தொடர்பாகப் புகார் அளிக்க அரசு உரிய வழிமுறையை உருவாக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து முழு அறிக்கையையும் ஆய்வு செய்யாமல் எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என கூறி வழக்கை 4 வாரங்களுக்குத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஒத்திவைத்தார். தற்போது வழக்கு விசாரணைக்கு ஒன்றிய அரசு ஒத்துழைக்கவில்லை என உச்சநீதிமன்றதில் விசாரணைக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ள மீண்டும் பெகாசஸ் விவகாரம் பூதாகரமாகியுள்ளது.