பஞ்சாப் மாநிலத்தில் பகவந்த் சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அரசு நடைபெற்று வருகிறது. அங்கு தற்போதைய ஆளுநராக தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செயல்பட்டு வருகிறார்.
எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை ஆளுநர்களை வைத்து ஒன்றிய அரசு மறைமுக அரசியல் செய்வதுபோல பஞ்சாபிலும் ஆளும் மாநில அரசை எதிர்த்து ஆளுநர் செய்யப்பட்டு வருகிறார். இதற்கு ஆம் ஆத்மி அரசு பல்வேறு தருணங்களில் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற மதநிகழ்ச்சிக்கு ஆன செலவை ஏற்கமுடியாது என மாநில அரசு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் மாளிகையில் மத சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஏப்ரல் 23ம் தேதி முதல் 29ம் தேதிவரை ஒரு வாரம் நடைபெற்றது. இந்த ஒருவார நிகழ்ச்சிக்கு ஆளுநர் மாளிகை கூடாரம் அமைத்தல், இருக்கைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு செலவுகளைச் செய்தது.
இந்த நிகழ்ச்சிகளை ஒரு தனியார் நிறுவனம் செய்துகொடுத்து அதற்காக ரூ.8.31 லட்சம் பில் அனுப்பியது. இதன் பின்னர் கடந்த மே 11ம் தேதி பில் தேதியிட்டு இந்த பில் கட்டணத்தை குறிப்பிட்ட நிறுவனத்துக்கு செலுத்திவிடுங்கள் எனக் கூறி ஜூன் 16ம் தேதி ஆளுநர் மாளிகை சார்பில் மாநில அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால், இந்த செலவை ஏற்க மாநில அரசுதற்போது மறுப்புத்தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியான தகவலின்படி ஆளுநர் மாளிகை அனுப்பிய பில் கட்டணத்தை எந்தப் பிரிவில் கணக்குக் காட்டுவது , எந்தச் செலவில் சேர்ப்பது எனத் தெரியவில்லை. இதனால் நிதிஅமைச்சகத்தால் ஆளுநர் மாளிகை அனுப்பிய பில்லுக்கு உடனடியாக பணம் செலுத்த முடியவில்லை என மாநில அரசு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆளுநரின் செலவுகளை மாநில அரசே பார்த்துக்கொள்ளும் நிலையில், அவர்கள் மாநில அரசுக்கே நேர்மையாக இருக்க வேண்டும். ஆனால் சிலர் மாநில அரசுக்கு குடைச்சல் கொடுத்து வருவதற்கு இந்த வழியில்தான் பதிலடி கொடுக்க வேண்டும் என இணையவாசிகள் கூறிவருகின்றனர்.