மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள கச்னாரியா என்ற பகுதியில் சுங்கச்சாவடி ஒன்று உள்ளது. இங்கு ராஜ்குமார் குர்ஜார் என்பவர் காரில் அங்கு வந்துள்ளார். அப்போது அவர் 'நான் உள்ளூர்வாசி சுங்கக் கட்டணம் செலுத்த முடியாது , கார் செல்வதற்கு வழி விடுங்கள்' என கூறியுள்ளார்.
அப்போது அங்கிருந்த சுங்கச்சாவடி பெண் ஊழியர் கட்டணத்தை செலுத்தும் படி கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நபர் திடீரென பெண் ஊழியர்ன் கன்னத்தில் அறைந்துள்ளார். இவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்த பெண்ணும் தனது செருப்பைக் கழட்டி அவரை அடித்துள்ளது.
இவர்கள் சண்டைபோட்டுக்கொள்ளும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து சுங்கச்சாவடி பெண் ஊழியர் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்துப் பாதிக்கப்பட்ட பெண், "அந்த நபர் தன் உள்ளூர்வாசி என்று கூறினார். நான் உங்களைத் தெரியாது என கூறினேன். அப்போது அவர் தன்னை தகாத வார்த்தையால் திட்டி அங்கிருந்து காரில் செல்ல முயன்றார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
அப்போது அவர் எனது முகத்தில் அடித்தார். நானும் பதிலுக்கு அடித்தேன். இந்த சுங்கச்சாவடியில் 7 பெண் ஊழியர்கள் பணியாற்றி வருகிறோம். அங்குப் பாதுகாவலர்கள் என்று யாரும் இல்லை" என தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதுமே சுங்கச்சாவடிகளில் அடிக்கடி இப்படியான தொடர் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.