மும்பையில் உள்ள போரிவலி மேற்கு சாய்பாபா நகரில் பழமையான 4 மாடி கட்டம் செயல்பட்டு வந்தது. இதைப் பார்த்த மாநகராட்சி அதிகாரிகள் இந்த கட்டடத்தில் இனி மேல் யாரும் வசிக்கக் கூடாது என நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
இதையடுத்து அங்கு குடியிருந்தவர்கள் தங்களின் உடைமைகளை எடுத்துக் கொண்டு வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்துள்ளனர். இந்நிலையில் இன்று இந்த பாழடைந்த கட்டடம் நொடிப் பொழுதில் இடிந்து தரைமட்டமானது.
இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் கட்டட இடிபாடுகளில் யாராவது சிக்கி இருக்கிறார்களா என தேடிப்பார்த்தனர். முன்கூட்டியே எச்சரிக்கை செய்யப்பட்டிருந்ததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த 4 மாடிக் கட்டடம் இடிந்து விழும் போது அங்கிருந்த சிலர் தங்களுடைய செல்போன்களில் வீடியோக்களாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இதையடுத்து இந்த வீடியோ வைரலாகி பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.