கர்நாடக மாநிலம் மங்களூரு விமான நிலையத்திலிருந்து மும்பை நோக்கி பயணிகளுடன் இண்டிகோ விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது 13ஏ இருக்கையில் அமர்ந்திருந்த இளைஞர் ஒருவர் தனது செல்போனில் 'சாட்' செய்து கொண்டிருந்தார்.
அப்போது அவரின் பக்கத்து இருக்கையில் இருந்தவர் தவறுதலாக செல்போனை பார்த்துள்ளார். அப்போது அவரது சாட்டில் நீ 'வெடிகுண்டு வைப்பவன் அல்லவா' என மெஜேஜ் வந்துள்ளது. இதைப்பார்த்து அருகே இருந்த பயணி அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனே அவர் இது குறித்து விமான ஊழியர்களிடம் கூறியுள்ளார். இதனால் புறப்படத் தயாராக இருந்த விமானத்தை உடனே நிறுத்தியுள்ளனர். மேலும் பயணிகளை விமானத்திலிருந்து வெளியேறும்படி கூறியுள்ளனர்.
இதனால் என்ன நடக்கிறது என பயணிகள் புரியாமல் பீதியடைந்துள்ளனர். பின்னர் விமானம் முழுவதும் சோதனை செய்த பிறகு வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என உறுதியானது. இதையடுத்து அந்த இளைஞரிடம் விசாரித்துள்ளனர்.
அப்போது அவர் தனது தோழி விளையாட்டாக மெசேஜ் அனுப்பியதாகக் கூறியுள்ளார். இதனால் விமானம் 6 மணி நேரம் தாமதத்திற்குப் பிறகு புறப்பட்டுச் சென்றது. மேலும் அந்த இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.