இந்தியாவில் IPL கிரிக்கெட் தொடர் நடத்துவதைப்போன்று பாகிஸ்தான், கனடா, வங்கதேசம், இலங்கை போன்ற நாடுகளிலும் லீக் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.
இதனால், சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதற்குக் காரணம் தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருப்பதால் அவர்களுக்குக் காயங்கள் ஏற்படுகிறது. இதனால் முக்கிய தொடர்களின் நட்சத்திர வீரர்களே போட்டியிலிருந்து விலகுகின்றனர்.
மேலும் ஐ.பி.எல் போன்ற லீக் போட்டிகளில் விளையாடவே வீரர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் பல வீரர்கள் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகின்றனர். இதனால் டெஸ்ட், ஒருநாள் போன்ற தொடர்களும் குறைந்து வருகிறது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அழிந்து வருகின்றன என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் ஆதங்கத்துடன் பேசியுள்ளது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேசிய தெரிவித்திருந்த கபில்தேவ், " ஒருநாள் போட்டிகள் அழிந்து வருகிறது. இது குறித்து ஐ.சி.சி முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே நிலை தொடர்ந்தால் ஐரோப்பாவில் கால்பந்து போட்டிகள் நடப்பதைப் போன்று ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் நடக்கும்.
உலகக் கோப்பை தொடர் மட்டுமே விளையாடும் நிலை உருவாகும். நாட்டுக்காக விளையாடாமல் பணத்துக்காக விளையாடுகின்றனர். கிரிக்கெட் வீரர்கள் ஐ.பி.எல் போன்ற போட்டிகளில் விளையாடினால் போதும் என்று நினைக்கிறார்களா? என கேள்வி எழுப்பி ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.