கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. இம்மாநில முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். கடந்த சில மாதங்களாகவே கர்நாடகாவில் மதமோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் இஸ்லாமியர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கொண்டு வருகின்றனர்.
மேலும் அம்மாநில அமைச்சர்கள் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதை பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களே இந்த புகார்களை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் கர்நாடகாவில் நடப்பது அரசு அல்ல என பா.ஜ.க அமைச்சர் மாதுசுவாமி பேசும் ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநில சட்டத்துறை அமைச்சராக இருப்பவர் மாது சுவாமி. இவர் அண்மையில் சமூக ஆர்வலர் பாஸ்கர் என்பவரிடம் பேசிக் கொண்டிருந்த ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், கர்நாடகாவில் நாங்கள் ஆட்சி செய்யவில்லை. வெறும் மேலாண்மை செய்து கொண்டிருக்கிறோம் என அமைச்சர் பேசியுள்ளார்.
மேலும் ஆர்வலர் பாஸ்கர், "விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடனில் பெரும் குளறுபடி நடைபெற்று வருவதாகவும் வட்டி என்ற பெயரில் சட்டவிரோதமாக விவசாயிகளிடம் வங்கி ஊழியர்கள் பணம் வாங்கி ஏமாற்றியுள்ளதாகவும்" புகார் கூறியுள்ளார்.
இதற்குப் பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர், "என்ன செய்வது என்னிடமே இவ்வாறு கடன் கொடுத்து பணம் வாங்கியுள்ளனர். நான் சோமசேகர அமைச்சரிடம் தெரிவித்துள்ளேன் என்ன செய்வார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
கர்நாடகாவில் நடப்பது அரசு அல்ல. வெறும் மேலாண்மை மட்டுமே. இன்னும் எட்டு மாதங்கள் என நாங்கள் காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கிறோம்" என பேசும் ஆடியோதான் இணையத்தில் வைரலாகி பா.ஜ.கவிற்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோவை அடுத்து அமைச்சர் மாதுசுவாமி பதவி விலக வேண்டும் என பா.ஜ.கவினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.