கடந்த 2002-ம் ஆண்டில் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்துக்குப் பின் குஜராத்தில் பெரும் வன்முறை ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தின்போது அகமதாபாத்தில் உள்ள ரன்திக்பூரைச் சேர்ந்த பில்கிஸ் பானு என்பவரையும் அவரின் குடும்பத்தினரையும் ஒரு இந்துத்துவ கும்பல் தாக்கியது.
அப்போது 5 மாதக் கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானுவை அந்தக் கும்பல் கூட்டுப் பலாத்காரம் செய்து, அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை கொலை செய்தது. அதுமட்டுமல்லாமல் பில்கிஸ் பானுவின் கையில் இருந்த இரண்டரை வயதுக் குழந்தையை பாறையில் மோதி அடித்துக் கொலை செய்து தப்பி ஓடியது. இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது.
இதைத் தொடந்து இந்த சம்பவத்தில் 11 பேரைக் போலிஸார் கைது செய்தனர். நீண்ட நாள் நடந்த இந்த வழக்கில் கடந்த 2008-ம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போலிஸார் உள்ளிட்ட 7 பேரை நீதிமன்றம் விடுவித்தது.
7 பேர் விடுதலையை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கில் 7 பேரையும் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட 11 பெரும் தண்டனையை குறைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். இந்த வழக்கில் தண்டனை குறைப்பு குறித்து மாநில அரசு முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியது.
இந்த நிலையில், பில்கிஸ் பானு வழக்கில் குற்றம் நிருபிக்கப்பட்ட 11 பேருக்கும் பொதுமன்னிப்பு வழங்கி குஜராத் பா.ஜ.க அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்துப்பேசிய குஜராத் மாநில அரசின் துணை முதன்மை செயலாளர் ராஜ்குமார், "11 குற்றவாளிகள் மொத்தம் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்துள்ளனர். சட்டத்தின்படி, ஆயுள் தண்டனை என்பது குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் ஆகும், அதன் பிறகு குற்றவாளி நிவாரணத்திற்கு விண்ணப்பிக்கலாம். அதன்பின் விண்ணப்பத்தை பரிசீலிப்பது அரசின் முடிவு. தகுதியின் அடிப்படையில், சிறை ஆலோசனைக் குழு மற்றும் மாவட்ட சட்ட அதிகாரிகளின் பரிந்துரைக்குப் பிறகு கைதிகளுக்கு விடுதலை அளிக்கப்படுகிறது." என்று கூறியுள்ளார்.