ஆந்திர மாநிலம், அன்னமையா மாவட்டத்தில் உள்ள குத்திகிபந்த தண்டா என்னும் பகுதியை சேர்ந்தவர் ரெட்டப்ப நாயக். இவருக்கு இரண்டு மகன் இருக்கும் நிலையில், மூத்த மகன் தாகூர் நாயக் (வயது 22) பொறியியல் கல்லூரி ஒன்றில் B.TECH இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
போதைக்கு அடிமையான இவர் வீட்டில் இருந்து தங்க நகைகளை திருடி தன்மூலம் போதைப்பொருள்களை வாங்கி பயன்படுத்திவந்தார். இது குறித்து இவரது தந்தை பலமுறை எச்சரித்தும் கேட்காமல் திரும்பவும் அதேபோன்ற செயலை செய்துவந்தார்.
மேலும், தந்தையிடம் என்னை தொடர்ந்து கண்டித்து வந்தால் தம்பியை கொன்றுவிடுவதாகவும் அடிக்கடி மிரட்டி வந்துள்ளார். மூத்த மகனின் செயலால் குடும்பமே பாதிக்கப்படும் என ரெட்டப்ப நாயக் மிகவும் வருந்தியுள்ளார். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடமும் இதுகுறித்து கூறி வந்துள்ளார்.
மேலும்,மகனின் செயலால் குடும்பம் பாதிக்கப்படாமல் இருக்க மகனை கொலை செய்யவும் திட்டமிட்டுள்ளார். இதற்காக பெங்களூரு விமான நிலையத்தில் காவலாளியாக பணிபுரியும் தனது உறவினர் சேகர் நாயக்கிடம் தனது மகனை கொன்றுவிடுமாறு கூறி ரூ.2 லட்சம் தருவதாக பேரம் பேசியுள்ளார்.
இதற்காக முன்பணமாக ரூ.50 ஆயிரம் முன்பணம் கொடுத்துள்ளார். அதன் பின்னர் சேகர் நாயக் தனது கூட்டாளி பிரதாப்புடன் சென்று கடந்த ஜூன் 28ம் தேதி ஆந்திர மாநிலம் திருமலை சென்று தாகூர் நாயக்கை காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்று மது வாங்கி கொடுத்து பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் பிணத்தை அங்கேயே போட்டுவிட்டு சென்றுள்ளனர்.
அந்த பகுதியில் இருந்து துர்நாற்றம் வந்ததால் அங்குள்ளவர்கள் இதுகுறித்து போலிஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி போலிஸார் வந்து அங்கு அழுகிய நிலையில் இருந்த சடலத்தை எடுத்து மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் கொலை குறித்து போலிஸார் விசாரணை நடத்தியதில் மகன் காணாமல் போய் 2 மாதமாகியும் புகார் செய்யாத ரெட்டப்ப ரெட்டி மீது சந்தேகம் எழுந்தது. உடனே அவரிடம் விசாரணை நடத்தியதில் மகனை ஆள் வைத்து கொலை செய்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து ரெட்டப்ப ரெட்டி, சேகர் நாயக் மற்றும் பிரதாப் ஆகியோரை போலிஸார் கைது செய்தனர். தந்தையே மகளை ஆள் வைத்து கொலை செய்துள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.