சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் துரித உணவாக பீட்சா இருந்து வருகிறது. இந்நிலையில், பீட்சா மாவின் மீது கழிவறையைச் சுத்தம் செய்யும் மாப்புகள் வைக்கப்பட்டுள்ளது போன்ற படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த படத்தைப் பார்த்து பீட்சா பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் பீட்சா பாதுகாப்பான முறையில்தான் சுத்தம் செய்யப்படுகிறதா என்ற ஐயமும் பலருக்கு தற்போது எழுந்துள்ளது.
இணையத்தில் வைரலாகும் அந்த படத்தில், உருண்டையாக பீட்சா மாவுகள் ட்ராலிகளில் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. இதற்கு மேல் கழிவறையைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் மாப்புகள் தொங்கவைக்கப்பட்டுள்ளது போன்று உள்ளது.
இந்தப்படம் பெங்களூருவில் உள்ள ஒரு டோமினோ பீட்சா பிற்பனையகத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் வைரலானதை அடுத்து இதற்கு டோமினோ நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.
அவர்களின் விளக்கத்தில், "நாங்கள் உணவு பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடித்துத்தான் தயாரிக்கிறோம். தவறு நடக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.