கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள தட்டேகெரே கிராமத்தைச் சேர்ந்தவர் சைத்ரா (வயது 28) , இவருக்கும் ஹோலேநரசிபுரா தாலுகாவைச் சேர்ந்த சிவகுமார் (வயது 32) என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக சென்ற இவர்கள் குடும்ப வாழ்க்கையில் நாள் செல்ல செல்ல அடிக்கடி தகராறு வந்துள்ளது. இதனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சைத்ரா விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளார். மேலும் கணவர் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நேற்று வந்துள்ளது. இந்த வழக்கில் ஆஜராக சிவகுமாரும் சைத்ராவும் வந்துள்ளனர். அப்போது தனது இரண்டு குழந்தைகளுக்காக மனைவியுடனான கருத்து வேறுபாடுகளை மறந்து வாழ்வதாக சிவக்குமார் நீதிமன்றத்தில் உறுதியளித்தார்.
பின்னர் மனைவியுடன் பேசுவதாக கூறி அவரை அழைத்துச்சென்று கழிவறை அருகே சென்றுள்ளார். உடன் அவர்களது குழந்தையும் வந்துள்ளார். அப்போது திடீரென தான் வைத்திருந்த கூர்மையான கத்தியை எடுத்த சிவகுமார் மனைவியின் கழுத்தை அறுத்துள்ளார். மேலும் தனது மகனையும் தாக்கியுள்ளார்.
பின்னர் அவர் தப்பிஓட முயன்றபோது அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் சிவக்குமாரை பிடித்து கைது செய்தனர். மேலும் சைத்ராவை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.