பீகாரில் 2020ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.கவுடன் கைக்கோர்த்து சட்டப்பேரவை தேர்தலை சந்தித்தது நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி (ஜே.டி.யு). இந்த தேர்தல் அறிவிப்பு வந்ததில் இருந்தே பா.ஜ.கவுக்கும், ஜே.டி.யு கட்சிக்கும் இடையே தொகுதி ஒதுக்கீடு செய்வதில் பிரச்சனை எழுந்தது. இருப்பினும் கூட்டணி உடையாமல் பா.ஜ.க தலைமை பார்த்துக் கொண்டது.
இந்த தேர்தலில் பா.ஜ.க, ஜே.டி.யு கூட்டணி எளிதில் வெற்றி பெற்றது. ஆனால் நிதிஷ்குமாரால் 43 இடங்களை மட்டுமே பெற முடிந்த நிலையில் பா.ஜ.கவும் 74 இடங்களில் வெற்றி பெற்றது.அதிக இடங்களில் வெற்றி பெற்றதால், பா.ஜ.கவில் இருந்துதான் முதல்வராக ஒருவரை நியமிக்க வேண்டும் என அதன் கட்சி தலைவர்கள் நிதிஷ்குமாருக்கு அழுத்தம் கொடுத்த நிலையில் மீண்டும் நிதிஷ்குமாரை முதல்வராக்க பா.ஜ.க ஒத்துக் கொண்டது. மேலும் பா.ஜ.க துணை முதல்வர் பதவியை பெற்றுக் கொண்டது.இதில் இருந்தே பா.ஜ.கவுக்கும், ஜே.டி.யு கட்சிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.
சமீபகாலமாக நிதிஷ்குமார் அரசு மீது பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் பகிரங்க ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். அதற்கு ஜே.டி.யு தலைவர்கள் பதிலடி கொடுத்து வந்தனர். அதைத் தொடர்ந்து பா.ஜ.க நிகழ்வுகளை நிதிஷ்குமார் புறக்கணித்து வந்தார்.
அதைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் பாட்னாவில் ஜே.டி.யூ எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், பாஜகவுடனான கூட்டணி முறிந்துவிட்டது என்று நிதிஷ்குமார் அறிவித்தார். அதன் பின்னர் பீகார் முதலமைச்சர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அங்கு பா.ஜ.க - ஜே.டி.யூ கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது.
அதன்பின்னர் நிதிஷ் குமார் லாலு பிரசாத் யாதவ்வின் ஆர்.ஜே.டி, காங்கிரஸ், இடதுசாரிகளுடன் இணைந்து புதிய ஆட்சியை அமைத்தார். இந்த கூட்டணியின் முதல்வராக நிதிஷ் குமாரும், துணை முதல்வராக லாலு பிரசாத் யாதவ்வின் மகன் தேஜஸ்வி யாதவ்வும் பதவியேற்றனர்.
இந்த நிலையில், பீகார் அரசியல் மாற்றத்துக்கு பின்னர் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றால் என்ன மாதிரியான முடிவுகள் வரும் என இந்தியா டுடே - சிவோட்டர் கருத்து கணிப்பு வெளியிட்டது. அதில் தற்போது சுமார் 21 இடங்கள் பா.ஜ.க.வுக்கு குறையும் என்று கூறப்பட்டுள்ளது. ஒரு மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்ததால் மட்டும் 21 இடங்களை பா.ஜ.க இழந்துள்ள நிலையில், இதே போன்ற கூட்டணி நாடு முழுவதும் ஏற்பட்டால் பா.ஜ.க துடைத்து எறியப்படும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.