மணிப்பூர் மாநிலத்தில் முதலமைச்சர் பிரேன் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பழங்குடியின மாணவர் அமைப்புகள், அம்மாநிலத்தின் வளர்ச்சிக்காக 'மணிப்பூர் (மலைப் பகுதிகள்) தன்னாட்சி மாவட்ட கவுன்சில் மசோதா 2021-வை' சட்டசபையில் தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக பா.ஜ.க அரசு வாக்குறுதி அளித்திருந்த நிலையில், தற்போது அதை நிறைவேற்ற மறுப்பதாக மாணவர் அமைப்பு புகார் அளித்துள்ளது.
பழங்குடியின மாணவர் அமைப்பினரின் போராட்டத்தை எதிர்த்து மற்றொரு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் மாணவர் அமைப்பினரின் அலுவலகத்தை பூட்டியதுடன் மாணவர் போராட்டங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், அம்மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்பினர் நேற்று தேசிய நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டதையடுத்து, இரு பிரிவினருக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் பூகாக்சாவ் இகாங்க் என்ற பகுதியில் நேற்று வாகனம் ஒன்றை 4 மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர்.
இதையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்ட நிலையில், இது கலவரமாகவோ வன்முறையாகவோ மாறிவிடக்கூடாது என்பதால் அங்கு அம்மாநில அரசு 5 நாட்களுக்கு இணைய சேவையை துண்டித்துள்ளது.
மேலும் போராட்டத்தின் காரணமாக அசாமில் இருந்து மணிப்பூருக்கு பொருட்கள் எடுத்து செல்லப்படும் சரக்கு லாரிகள் எல்லைப் பகுதியில் நுழைய முடியாமல் முடங்கியுள்ளது. இந்த போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வர மணிப்பூர் அரசு பிஷ்னூர் மற்றும் சவுராசந்த்பூர் ஆகிய இரு மாவட்டங்களில் அடுத்த 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்கள் சேவைகளும் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அம்மாநில உள்துறை சிறப்பு செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமூக வலைதளம் மூலம் சில சமூக விரோதிகள் வெறுப்பு பிரச்சாரத்தை பரப்பி அதன் மூலம் வன்முறை ஏற்படுத்த பார்க்கிறார்கள். எனவே, இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது." என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.