ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் பகுதியை சேர்ந்தவர் ரவிநாத். 60 வயதுடைய இவர், தனது இல்லற வாழ்க்கையை துறந்து ஒரு துறவியாக வாழ்ந்து வந்தார். இவருக்கு சொந்தமாக நிலம் ஒன்று இருந்துள்ளது. அந்த நிலமானது, பீன்மால் தொகுதி பா.ஜ,க எம்.எல்.ஏ., பூரா ராம் செளத்ரியின் நிலத்திற்கு அருகே இருந்துள்ளது.
இந்த நிலையில், பூரா ராம் செளத்ரி அந்த பகுதியில் ஒரு ரிசார்ட் கட்டுவதற்காக திட்டம் வைத்திருந்தார். அதற்கு துறவியின் நிலமும் தேவைப்பட்டது. எனவே அவர் இவரை அணுகி நிலத்தை கேட்டுள்ளார். அதற்கு துறவியோ நிலத்தை கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். இருப்பினும் எம்.எல்.ஏ., மீண்டும் மீண்டும் துறவிக்கு மிரட்டியும், தொந்தரவு கொடுத்தும் வந்துள்ளார்.
இவரது தொல்லை தாங்க முடியாத துறவி கடும் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டார். இதையடுத்து கடந்த வியாழக்கிழமை, ஒரு கோயிலிலுள்ள மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளார். தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த துறவியை கண்டு பதறிப்போன கோயில் பக்தர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் அதிகாரிகள், அவரது உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அருகிலிருந்த அவரது பொருட்களில், கடிதம் ஒன்று இருந்தது. அந்த கடிதத்தில், தனது இறப்பிற்கு பா.ஜ,க எம்.எல்.ஏ., பூரா ராம் செளத்ரி தான் காரணம் என்றும், அவர் தனது நிலத்தை கேட்டு தொல்லை கொடுத்து வந்ததால் தற்கொலை செய்துகொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் தனது உடலை உடற்கூறாய்வு செய்ய வேண்டாம் என்றும் எழுதியிருந்தார்.
நிலத்தை கேட்டு பா.ஜ.க எம்.எல்.ஏ., தொந்தரவு செய்ததால் மன உளைச்சல் ஏற்பட்டு ஒரு துறவி கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.