கொரோனா தொற்று காரணமாக உலகெண்டும் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், மீண்டும் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பி வந்தது.
ஆனால், அதன் பின்னர் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்த காரணத்தால் உலகெங்கும் விநியோக சங்கிலி பெரும் பாதிப்புக்கு உள்ளாகியது. இதனால் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பாடு விலைவாசி உலகெங்கும் கடுமையாக உயர்ந்தது.
முதலீடு செய்தவர்கள் தங்கள் முதலீகளை விலக்கிகொள்ள ஆரம்பித்தனர். இதனால் கடுமையான பணவீக்கம் ஏற்பட்டது. இதை சமாளிக்க அந்தந்த நாடுகளின் மத்திய வங்கிகள் வங்கி வட்டி விகிதங்களை உயர்ந்த ஆரம்பித்தன.
அதன் தொடர்ச்சியாக அமெரிக்க மத்திய வங்கி வட்டி அதிகரிப்பை அறிவித்தது. அதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டன.
இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் கொள்கைக் கூட்டம் கடந்த புதன் கிழமை தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பின்னர் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தற்போது ரெப்போ வட்டி விகிதம் 4.90 சதவீதத்தில் இருந்து 5.40 சதவீதமாக உயர்த்த ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழுக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாகவும். இதற்கு நிதிக்கொள்கை குழுவின் ஆறு உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்துள்ளனர் என்றும் கூறினார்.
மேலும், 2022-23 நிதியாண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 7.2 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது என்றும், அதேபோல், பணவீக்க வீகிதமும் 6.7 சதவீதமாக கணிக்கப்பட்டுள்ளது. அது அடுத்தடுத்த காலாண்டுகளில் மெல்ல குறையும் என்றும் கூறியுள்ளார். அதோடு, கடந்த சில மாதங்களில் இந்தியாவில் இருந்து 1,330 கோடி டாலர்கள் முதலீடு வெளியேறியுள்ளது என்றும் கூறினார்.
ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதால் வங்கிக்கடன் பெரும் பொதுமக்கள் தாங்கள் வாங்கிய வீடு,வாகனம், தனிநபர் கடனுக்கு கூடுதல் வட்டி கட்ட வேண்டிய சூழல் ஏற்படும். அதாவது வங்கிகளுக்கான ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளதால் அந்த வங்கிகள் கூடுதல் வட்டியை கட்டவேண்டியிருக்கும்.
இதனால் வங்கிகள் அந்த கடன்சுமையை மக்கள் மேல் திணிக்கும். இதனால் ஏற்கனவே விலைவாசி உயர்வால் பாதிக்கப்படும் பொதுமக்கள் மேலும் அவதிப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.