ஹரியானா மாநிலம், நரைனா கிராமத்தைச் சேர்ந்தவர் ஓம்பிரகாஷ். இவர் 1980ம் ஆண்டுகளில் ராணுவத்தில் பணியாற்றியுள்ளார். அப்போது கார், இருசக்கர வாகனங்களைத் திருடி வந்துள்ளார்.
இதனால் ஓம்பிரகாஷை போலிஸார் கைது செய்துள்ளனர். பிறகு இந்த வழக்கிலிருந்து விடுதலையான ஓம்பிரகாஷ் தொடர்ந்து திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அவர் ராணுவத்திலிருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து 1992ம் ஆண்டு பிவானி என்ற பகுதியில் கொள்ளையடிக்கும்போது இருசக்கர வாகனத்தில் வந்தவரைக் கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த வழக்கில் தலைமறைவான ஓம்பிரகாஷ், போஜ்புரி படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து அங்கேயே செட்டிலாகியுள்ளார்.
இவரை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்துக் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக போலிஸார் தேடிவந்தனர். இத்தனை ஆண்டுகள் தேடியும் இவர் போலிஸார் கண்ணில் படாமல் படங்களில் நடித்து வந்துள்ளார். மேலும் இவரைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு வெகுமதி கொடுக்கப்படும் எனவும் போலிஸார் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில்தான் ஓம்பிரகாஷ் போஜ்புரி படங்களில் நடித்து வருவது குறித்து ஒருவர் போலிஸாருக்கு தெரிவித்துள்ளார். இதையடுத்து தனிப்படை போலிஸார் காஜியாபாத்தின் ஹர்பன்ஸ் நகரில் சினிமா ஷுட்டிங்கில் இருந்தபோது ஓம்பிரகாஷை சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.
இதையடுத்து தகவல் கொடுத்த நபருக்கு போலிஸார் ரூ.25 ஆயிரம் வெகுமதி அளித்துள்ளனர். கொலை, கொள்ளை வழக்கில் 30 ஆண்டு தலைமறைவாக இருந்த நபர் 28 படங்களில் நடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.