கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியிலுள்ள அரசு பள்ளியில் படிக்கும் 12 வயதுடைய மாணவர் ஒருவர், யூடியூப் பார்த்து ஒயின் தயாரிக்க முனைப்பு காட்டியுள்ளார். அதன்படி ஒரு பாட்டிலில் திராட்சைகளை அடைத்து ஒயின் தயாரித்து அதனை மண்ணில் புதைத்துள்ளார். பின்னர் சில நாட்கள் கழித்து அதனை மண்ணில் இருந்து வெளியே எடுத்துள்ளார்.
இதையடுத்து இதனை தனது பள்ளிக்கு எடுத்து சென்று, தனது நண்பருக்கு ருசி பார்ப்பதற்காக கொடுத்துள்ளார். அவரும் அதை வாங்கி குடித்த சில நேரங்களிலே, வாந்தியெடுத்து மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கூட்டி சென்ற பள்ளி நிர்வாகம், சிறுவனின் பெற்றோருக்கும் தகவல் அளித்தது.
பின்னர் சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், ஒயினை கொடுத்த சிறுவன் தவறை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஒயினை, அதிகாரிகள் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
மேலும் இந்த ஒயினில் ஸ்பிரிட், ஆல்கஹால் உள்ளிட்ட எதுவும் கலந்திருப்பது தெரிய வந்தால், சிறுவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் எச்சரித்தனர்.
இது குறித்து மீண்டும் சிறுவனிடம் கேட்டபோது, தான் யூடியூப் பார்த்து திராட்சைகளை மட்டும் வாங்கி அதனை செய்ததாக கூறினார். மேலும் தான் வேறு எந்த பொருட்களையும் பயன்படுத்தவில்லை என்றும் தெரிவித்தார்.
தற்போது விசாரணை தொடர்ந்து நடைபெறும் நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் நலமுடன் இருப்பதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.