ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள சௌபாஸ்னி ஹவுசிங் போர்டில் 36 வயதுடைய இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திடீரென வயிற்று வலி வந்ததால் மதுரதாஸ் மாத்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு இவருக்கு பரிசோதனை செய்ததில் வயிற்றில் வித்தியாசமான பொருள்கள் இருந்துள்ளன. பின்னர் முறையாக பரிசோதனை செய்ததில் அவர் வயிற்றில் நாணயங்கள் இருப்பது தெரியவந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பின்னர் எண்டோஸ்கோபி செயல்முறையின் உதவியுடன், மருத்துவர்கள் இளைஞரின் உடலில் இருந்து 61 நாணயங்களை வெளியே எடுத்துள்ளனர். இளைஞரின் உடலில் இருந்து 61 நாணயங்களை எடுத்து அவரது உயிரைக் காப்பாற்றியது அவரது அதிர்ஷ்டம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பேசிய மருத்துவர்கள், "அந்த இளைஞன் மனநோயாளியாகத் தெரிகிறார். கடந்த சில மாதங்களாக, ஒன்று மற்றும் இரண்டு ரூபாய் நாணயங்களை விழுங்கி வந்துள்ளார். 8 மருத்துவர்கள் கொண்ட குழு ஒன்றரை மணி நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக நாணயங்களை எடுத்து 36 வயது இளைஞரின் உயிரைக் காப்பாற்றியது" எனக் கூறியுள்ளார்.
இந்த நிலையில், அவர் உடலில் இருந்து எண்டோஸ்கோபி செயல்முறையின் உதவியுடன் நாணயங்கள் வெளியே எடுக்கப்பட்டதை மருத்துவர்கள் இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.