உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவர், அதே பகுதியை சேர்ந்த ஒருவரை கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஒரு கல்லூரியில் lecturer-ஆக பணிபுரியும் இவரிடம், இவரது கணவர் வீட்டார் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியுள்ளனர்.
மேலும் இவரது மாமியார், இவரிடம் 2 லட்ச ரூபாய் வரதட்சணை கேட்டு தினமும் துன்புறுத்தி வந்துள்ளார். அதோடு, சிறு விஷயம் என்றாலே இவரது கணவரும், மாமியாரும் இந்த இளம்பெண்ணை அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர்.
இப்படி அடித்து துன்புறுத்தி வந்த கணவர், சில நாட்களுக்கு முன்பு தனது மனைவியை ஒரு அறையில் போட்டு பூட்டியுள்ளார். மேலும் அவரது கையில் இருந்த செல்போனையும் பறித்து வைத்துள்ளார். இதனால் அவர் யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை.
இந்த நிலையில், நாள் முழுவதும் அறையில் இருந்த அந்த இளம்பெண்ணை, போதையில் இருந்த கணவரும், வீட்டிற்கு வந்திருந்த அவரது 3 நண்பர்களும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் மனைவி என்றும் பாராமல் பெண்ணின் கணவரே பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். பின்னர் அவர்களிடம் இருந்து தப்பித்த இளம்பெண், தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கே அழுதுகொண்டே தனக்கு நடந்தவற்றை கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய், இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் தெரிவிக்க திட்டமிட்டார். அதன்படி பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல்துறையில் தனது மாமியார், கணவர் மற்றும் அவரது நண்பர்கள் மீது புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் அதிகாரிகள், அவர்களை கைது செய்வதற்காக வீட்டிற்கு வருவதற்குள், சம்பவம் அறிந்து அவர்கள் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டனர்.
இதையடுத்து அவர்கள் அனைவரையும் பிடிக்க தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.