இந்தியாவின் சில இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி மத்தியப்பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள ஜெயின் பப்ளிக் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இதில், மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்திய மருத்துவர் ஜிதேந்திரா என்பவர், ஒரே ஊசியை பயன்படுத்தி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளார். இந்த சம்பத்தை அங்கிருந்தவர் ஒருவர் வீடியோ எடுத்த நிலையில், இது குறித்து அறிந்த மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர்.
அந்த வீடீயோவை சோதனை செய்தபோது மருத்துவர் ஜிதேந்திரா 30 மாணவர்களுக்கு ஒரே ஊசியில் தடுப்பூசி செலுத்தியது தெரியவந்தது. இது பெரும் சர்ச்சையான நிலையில், மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பேசியுள்ள மருத்துவர் ஜிதேந்திரா, "நான் செய்தது தவறு என்பது எனக்கு நன்கு தெரியும். இந்த பணி எனக்கு ஒதுக்கப்பட்டபோது ஒரு ஊசியை பயன்படுத்திதான் அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டுமா என்று மேலதிகாரிகளை பார்த்து கேட்டபோது அதற்கு அவர்கள் ஆம் என்றார்கள். நான் அதன்படியே செய்தேன். இது எப்படி எனது தவறாகும்" என கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவர் ஜிதேந்திர், மாவட்ட தடுப்பூசி திட்ட அலுவலர் மருத்துவர் ராகேஷ் ரோஷன் மீது துறை ரீதியான விசாரணைக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.