கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள மஞ்சேஷ்வர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது பவா (50). இவர் தனது மனைவி அமீனா,1 மகன், 4 மகள்களுடன் வசித்து வருகிறார். இவர்களின் 2 மகள்களுக்கு திருமணம் முடிந்திருக்கும் நிலையில், மற்ற இரு மகள்களும் படித்து கொண்டிருக்கின்றனர். மேலும் மகன் கத்தாரில் வேலை பார்த்து வருகிறார்.
இதனிடையே சிறுக சிறுக சேமித்த பணத்தில் சொந்த வீட்டை கட்டிய முகமது பவா, தனது பிள்ளைகளுக்காக வெளியில் கடன் வாங்கியிருந்தார். அங்கே இங்கே என்று மொத்தம் சுமார் 50 லட்சம் அளவிற்கு இவரது கடன் இருந்ததால், வேறு வழியின்றி தனது சொந்த வீட்டை விற்க முடிவு செய்திருக்கிறார். அதன்படி வீட்டை விற்பதற்காக ஒருவரை கூட்டி வந்துள்ளார். அவருக்கும் வீடு மிகவும் பிடித்திருந்ததால், 40 லட்சத்திற்கு பேசி முடித்துள்ளார்.
இந்த நிலையில், வீட்டை விற்பதற்காக முன்பணம் வாங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு அவருக்கு மிகப்பெரிய ஆனந்த அதிர்ச்சி நிகழ்ந்திருக்கிறது. சிறிது நேரத்திற்கு முன்பாக, ரூ.50 மதிப்பிலான லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கிய முகமதுவிற்கு, ரூ.1 கோடி பணம் விழுந்து ஜாக்பாட் அடித்திருக்கிறது. இதனால மிகவும் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்த முகமது தான் வீட்டை விற்கவிருந்த முடிவை மாற்றியுள்ளார்.
இந்த 1 கோடி ரூபாய் பணத்தில் வரி பிடித்தது போக, அவருக்கு ரூ.63 லட்சம் கிடைத்துள்ளது. இந்த பணத்தில் தனது கடனை எல்லாம் அடைத்த பிறகு, தன்னை போல் கடன் தொல்லையில் கஷ்டப்படுவர்களுக்கு மீதி பணத்தை கொடுத்து உதவப்போவதாக முகமது பவா தெரிவித்துள்ளார்.