பஞ்சாப் மாநிலம் மொஹாலி பகுதியை சேர்ந்தவர் குர்தீப் சிங். இவருக்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை இருக்கும் நிலையில், இவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த 19 ஆம் தேதி பரிகாரம் செய்வதற்காக குர்தீப் சிங்கை அவரது மனைவி அருகில் உள்ள ஆற்றுக்கு அழைத்துள்ளார். குர்தீப் சிங்கும் வருவதாக கூறிய நிலையில், அவர், அவரது மனைவி, மற்றும் மனைவியின் தாய் ஆகியோர் ஆற்றுக்கு சென்றுள்ளனர்.
அங்கு சென்ற நிலையில், தனது கணவர் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்ததாக குர்தீப் சிங்கின் மனைவி போலிஸில் புகார் அளித்துள்ளார். உடனே சம்பவ இடத்துக்கு வந்து போலிஸார் குர்தீப் சிங்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது தொடர்பாக விசாரணை நடத்தியபோது குர்தீப் சிங்கின் மனைவி முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறியுள்ளார்.
இதனால் அவர்மீது சந்தேகமடைந்த போலிஸார், மனைவியிடம் மேற்கொண்டு நடத்திய விசாரணையில் கணவர் எப்போதும் என்னை சந்தேகப்பட்டதால் தனது தாயோடு சேர்ந்து நீரில் மூழ்கடித்து கணவரை கொன்றதாக கூறியுள்ளார்.
இதன் பின்னர் குர்தீப் சிங்கின் மனைவி மற்றும் அவரது மாமியார் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 302 (கொலை), 364 (கடத்தல்), மற்றும் 120-பி (குற்றச் சதி) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்த போலஸார் அவர்களை சிறையில் அடைத்துள்ளனர்.