நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் ஜூலை 18ம் தேதியிலிருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடர் தொடங்கிய நாளிலிருந்தே எதிர்க்கட்சிகள் விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி உயர்வு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் என நோட்டீஸ் வழங்கி வருகின்றனர்.
ஆனால் ஒன்றிய அரசு எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்க மறுப்பு தெரிவித்து வருகிறது. இதனால் எதிர்க்கட்சிகள் ஒன்றிய அரசைக் கண்டித்து அவைக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இப்படி போராட்டம் நடத்தும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நேற்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 எம்.பி.க்கள் மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கு தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் இருந்து 19 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மாநிலங்களவை இன்று தொடங்கிய உடன் விலைவாசி உயர்வு குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.
இதையடுத்து அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி 19 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதில் தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர்கள் சண்முகம், என்.ஆர்.இளங்கோ, கிரிராஜன், கனிமொழி என்.வி.என்.சோமு ஆகிய 4 பேரும் சஸ்பெணட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஜனநாயகத்தின் குரலை நெரிக்கும் செயலில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளனர்.