உத்தரபிரதேச மாநிலம் லக்னோ பகுதியை சேர்ந்தவர் சுசீலா திரிபாதி 9வயது 82). ஓய்வு பெற்ற ஆசிரியையான இவர், ஜிம் பயிற்சியாளரான தனது மகன் அமீத் என்பவருடன் வசித்து வந்துள்ளார். அமீத் தனது வீட்டில் பிட்புல் மற்றும் ஒரு லாப்ரடோர் ரக 2 நாய்களை வளர்த்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, வழக்கம்போல் மகன் ஜிம்முக்கு சென்றதும் வீட்டில் தனியே இருந்த சுசீலாவை பிட்புல் நாய், சரமாரியாக கடித்து குதறியுள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த சுசீலா இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் வீட்டிற்கு வந்த மகன், தாய் இரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கே பரிசோதனை செய்ததில் சுசீலா ஏற்கனவே இறந்துவிட்டதாக அமீத்திடம் மருத்துவர்கள் தெரிவிட்டனர்.
இந்த சம்பவம் அமீத் மட்டுமின்றி அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், தான் வளர்த்து வந்த இரண்டு நாய்களையும் மகன் அமீத், நாய்கள் லக்னோ மாநகராட்சியில் ஒப்படைத்தார். தனது தாயை கொடூரமாக கடித்து குதறிய நாயை ஒன்றும் செய்யாமல், நாய்கள் காப்பகத்தில் பத்திரமாக அனுப்பிவைத்துள்ள மகன் அமீத்தின் செயல் பெரும் பாராட்டை பெற்றது.
இந்த நிலையில், காப்பகத்தில் சேர்க்கப்பட்ட பிட்புல் நாயை தனிக்கூண்டில் அடைத்து வைத்து அதன் நடவடிக்கைகளை அங்குள்ள கண்காணிப்பாளர்கள் கண்காணித்து வருகின்றனர். மேலும் நாய் வளர்ப்பு பிரியர்கள், இந்த பிட்புல் நாயை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக டெல்லி, பெங்களூரு, லக்னோ, உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து இந்த நாயை தத்தெடுத்து வளர்ப்பதில் முனைப்புக்காட்டி வருகின்றனர். இதற்கு போட்டி அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த நாயை தத்தெடுப்பது குறித்து விதிகளின்படி முடிவெடுக்கப்படும் என லக்னோ மாநகராட்சி தெரிவித்துள்ளது.
முன் காலத்தில் பிட்புல் நாயை வேட்டையாட பயன்படுத்த பட்டதால், இதன் குணம் மிகவும் கொடூரமாக இருக்கும். இதனால், இங்கிலாந்து உள்ளிட்ட 5 நாடுகளில் இந்த நாயை வளர்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.