கடந்த மாதம் ஒன்றிய அரசு அறிவித்த 'அக்னிபாத்' திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. பீகாரில் தொடங்கிய இந்த போராட்டம், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் முக்கிய நகரங்களுக்கும் பரவி போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி தாக்குதல் நடத்தியதால், ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் இரயில்களுக்கு தீவைத்த தங்கள் எதிர்ப்புகளை காட்டினர்.
மேலும் பீகாரில் இந்த திட்டத்தை ஆதரித்து பேசிய பா.ஜ.க. தலைவர்களின் வீடுகள், அலுவலகங்களை சூரையாடி தீ வைத்ததால் பெரும் வன்முறைகாடாக அப்பகுதிகள் காட்சி அளித்தது. இதில் பல சேதாரங்கள் ஏற்பட்டது.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடரில், "அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் மற்றும் போராட்டக்காரர்களால் இரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதா? அப்படியானால், அதன் விவரங்கள், மாநில வாரியாக வேண்டும் என்றும்,
இரயில்களை ரத்து செய்ததாலும், திருப்பி விட்டதாலும் இரயில்வேக்கு ஏற்பட்ட இழப்பு, பயணிக்கும் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்பைத் தவிர அனைத்து ரயில் சேவைகளும் சீரமைக்கப்பட்டுவிட்டதா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன? என்றும் மாநிலங்களவையில் ம.தி.மு.க எம்.பி வைகோ கேள்வியெழுப்பினார்.
அதற்கு இரயில்வே, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான அஷ்வினி வைஷ்ணவ் பதிலளித்தார். அதாவது "அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மொத்தம் 62 இடங்களில் இரயில் சேவைகள் பாதிக்கப்பட்டது. மேலும் ஜூன் 15 முதல் ஜூன் 23 வரை இந்தியா முழுவதும் மொத்தம் 2,132 இரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
ஜூன் 14 முதல் ஜூன் 30 வரையிலான காலகட்டத்தில், இயக்கவிருந்த இரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், சுமார் 102.96 கோடி ரூபாய் திருப்பி வழங்கப்பட்டது. எல்லாவற்றிக்கரும் மேலாக இந்த போராட்டத்தின் மூலம் ஏற்பட்ட இரயில்வே சொத்துக்களின் சேதத்திற்கும், அழிவிற்கும் சுமார் 259.44 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது ரத்து செய்யப்பட்ட அனைத்து இரயில்களும் இயங்குகின்றன" என்றார்.