கடந்த இரண்டு மாதங்கள் இந்திய விமான துறைக்கு மிகவும் சோதனையான காலகட்டம் என்றே சொல்லலாம். அந்த அளவு மிக அதிகமான விமானங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுவருகிறது.
இண்டிகோ விமானம் இரண்டுமுறை தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தானில் தரையிறங்கியது. அதேபோல, நடுவானில் AC வேலை செய்யாமல் பாதிப்பு, பொருள்கள் பயணிகள் மீது விழுந்து பாதிப்பு என தொடர்ந்து விமான கோளாறுகள் ஏற்பட்டன.
இந்த நிலையில், தற்போது ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துபாயில் இருந்து கொச்சிக்கு 258 பேருடன் ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருக்கும்போது விமானத்தில் இருக்கும் காற்றின் அழுத்தம் திடீரென குறையத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக விமானத்துக்குள் காற்றின் அழுத்தம் குறைந்ததால் பயணிகள் ஆக்ஸிஜன் மாஸ்க்கள் மூலம் சுவாசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து விமானம் மும்பையில் அவசர அவசரமாக தரையிறங்கியது. இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த பயணிகள் சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளத்து.