கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்தது. அங்கு பினராயி விஜயன் முதல்வராக இருக்கும் நிலையில், திருவனந்தபுரம் மாநகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆர்யா ராஜேந்திரன் மேயராக இருக்கிறார்.
இந்த நிலையில், திருவனந்தபுரம் பொறியியல் கல்லுாரி அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணியர் அமர நீளமான இரும்பு 'பெஞ்ச் அமைக்கப்பட்டிருந்தது. இங்கு மாணவர்கள், மாணவிகள் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து பேசி வருவர்.
இந்த பென்ச் திடீர் என உடைக்கப்பட்டு இடைவெளி விட்டு மூன்று தனித்தனி இருக்கைகளாக வெட்டப்பட்டிருந்தன. இதைத் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் இது தொடர்பாக விசாரிக்கும்போது மாணவர்களும், மாணவிகளும் ஒன்றாக அமர்ந்திருப்பது பிடிக்காத சிலர் இப்படி செய்தது தெரியவந்தது.
உடனடியாக அந்த உடைக்கப்பட்ட பெஞ்சில் மாணவர்களும், மாணவிகளும் ஒன்றாக அமர்ந்து அதை படம் எடுத்து இணையதளத்தில் பதிவிட்டனர். அதோடு, பழமையான சிந்தனை கொண்டவர்கள் இந்த காரியத்தை செய்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த புகைப்படம் வைரலான நிலையில், இதுகுறித்து திருவனந்தபுரம் பெண் மேயர் ஆர்யா ராஜேந்திரன், அந்த பஸ் நிறுத்தத்தை நேற்று நேரில் வந்து பார்வையிட்டார்.
பின்னர் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட அவர், முற்போக்கு சிந்தனை உடைய கேரளத்தில் ஆணும், பெண்ணும் ஒன்றாக அமர எந்த தடையும் இல்லை. காலம் மாறிவிட்டது என்பதை புரிந்து கொள்ளாத பழங்கால சிந்தனையிலேயே ஊறித் திளைப்பவர்களை பார்த்து பரிதாபப்படுவதை தவிர வேறு வழியில்லை" எனக் கூறியுள்ளார். அவரின் இந்த அறிக்கை பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்று வருகிறது.