மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து மகாராஷ்டிர மாநிலம் புனே நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்தில் 55 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
இந்த பேருந்து மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தின் கால்கட் சஞ்சய் சேது பகுதியில் உள்ள ஆற்று பாலத்தில் சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த இந்த பேருந்து, பாலத்தின் தடுப்பு சுவரை இடித்துத்தள்ளி ஆற்றுக்குள் கவிழ்ந்துள்ளது.
இதைக் கண்ட அந்த பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் பேருந்தில் பயணித்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மீட்புப்பணியில் 15 பேர் மீட்கப்பட்ட நிலையில், 12 பயணிகள் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். மீட்கப்பட்டவர்களில் இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆற்றில் கவிழ்ந்த பேருந்து கிரேன் மூலம் தற்போது வெளியே கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த பகுதியில் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும்வரை மீட்புப்பணி தொடரும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.