இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. அதில் தென்னிந்திய மாநிலமான தெலுங்கானாவும் ஒன்று. அங்கு தலைநகர் ஹைதராபாத் போன்ற பகுதிகளில், ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. முக்கிய நதிகளில் கரையை கடந்து வெள்ளம் ஓடுவதால் குடியிருப்புகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.
மீட்பு பணியில் மாநில அரசு முழு அளவில் ஈடுபட்டுள்ளது. வெள்ள அபாயம் உள்ள இடங்களில் இருந்த பொதுமக்கள் தொடர்ந்து அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். ஏராளமான பொதுமக்கள் அரசின் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தெலுங்கானாவின் ஆசிபாபாத் மாவட்டத்தின் குமுரம் பீம் பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவர் வீட்டில் இருந்தபோது அவரின் வீடு வெள்ளத்தால் சூழப்பட்டது. இந்த சூழலில் அவரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டி இருந்ததால் அந்த பகுதியை சேர்ந்த 6 பேர் அவரை மீட்க முயன்றுள்ளனர்.
அப்போது அதில் இரண்டு இளைஞர்கள் எதிர்பாராத விதமாக வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணியில் அந்த பகுதி மக்கள் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்கள் காணாமல் போயுள்ளனர்.
இதைத் தொடர்ந்து இந்த தகவல் மீட்பு படையினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு படையினர் காணாமல் போன இளைஞர்களை தேடும் பணியில் ஈடுபட்ட நிலையில் அவர்கள் சடலமாக ஒரு ஓடை அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.