ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாகக் கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதையடுத்து வெள்ள நீர் புகுந்த இடங்களிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சோமன்பள்ளி கிராமத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் ஜே.சி.பி எந்திரம் ஒன்று சிக்கிக்கொண்டுள்ளது. இதில் இருந்த இரண்டுபேர் தப்பிச் செல்ல முடியாமல் வெள்ளப் பெருக்கில் சிக்கிக் கொண்டுள்ளனர்.
இதனை அறிந்த மீட்புக்குழுவினர் உடனே அப்பகுதியில் வந்து இருவரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் வெள்ளப் பெருக்கு அதிகமாக இருந்ததால் அவர்களை மீட்பதில் சிக்கல் எழுந்தது.
பின்னர் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஹெலிகாப்டர் உதவியுடன் கயிறு மூலம் இருவரையும் பத்திரமாக மீட்டு முகாமில் தங்க வைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த பலரும் இருவரையும் பத்திரமாக மீட்ட மீட்புக்குழுவுக்கு நன்றி தெரிவித்து வாழ்த்தி வருகின்றனர். வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில் பொதுமக்கள் செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.