பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள புல்வாரி ஷெரீப் பகுதியில் தீவிரவாத இயக்கம் ஒன்று செயல்பட்டு வருவதாக உளவுத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து ஜூலை 11ம் தேதி அப்பகுதியில் போலிஸார் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்துள்ளனர்.
அப்போது தீவிரவாதிகளாக சந்தேகிக்கப்படுவதாக இருவரை கைது செய்துள்ளனர். இவர்களிடம் விசாரணை செய்ததில், ஜூலை 12ம் தேதி பிரதமர் மோடி வருகையின் போது தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், பிரதமர் மோடியின் வருகைக்கு 15 நாட்களுக்கு முன்காகவே சிலருக்கு ஆயுதப் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 6,7ம் தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர்.
இதுமட்டுமல்லாது 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவதே இந்த இயக்கத்தின் திட்டம் என்பதும் தெரியவந்துள்ளது என்று உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தீவிரவாதி என கைது செய்யப்பட்ட இருவரில் ஜலாவுதீன் என்பவர் ஜார்கண்ட் மாநிலத்தில் காவல்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர் என்பதையும், மற்றொருவர் அதர் பர்வேஸ் என்றும் அடையாளம் கண்டுள்ளனர்.
இதையடுத்து உளவுத்துறை அதிகாரிகள் இவர்களுக்கு எந்தெந்த தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருக்கின்றனர் என்பது குறித்து போலிஸார் விசாரணைமேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.