ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள அமர்நாத் குகையில் இயற்கையாக அமையும் பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வருவர். கொரோனா காரணமாக கடந்த இரு ஆண்டுகள் யாத்திரை செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்து அனைத்துக்கும் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இந்தாண்டு யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை அமர்நாத் யாத்திரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதனால் தினமும் ஏராளமான பக்தர்கள் அமர்நாத் யாத்திரைக்கு சென்று வருகின்றனர். ஆனால் வானிலை காரணமாக இரண்டு நாள் நிறுத்தப்பட்ட யாத்திரை பின்னர் மீண்டும் தொடங்கியது. இந்த யாத்திரையின்போதுதான் விபரீதம் ஒன்று நடந்துள்ளது.
யாத்திரை நடந்துகொண்டிருந்தபோது, அமர்நாத் யாத்திரை குகை இருக்கும் மத்திய காஷ்மீரின் கந்தர்பால் பகுதியில் உள்ள பால்டால் முகாம் அருகே திடீரென கனமழை பெய்தது. அதைத் தொடர்ந்து கடும் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவும் ஏற்பட்டது.
இதில் யாத்திரை சென்ற பயணிகள் சிலர் சிக்கிக்கொண்டனர். வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதோடு 40 பேர் காணாமல் போயுள்ளனர். இதனால் பலிஎண்ணிக்கை மேலும் உயரும் என அச்சம் எழுந்துள்ளது.
காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.