2021 ஆம் ஆண்டு டிஜினல் இந்தியா என்ற நிறுவனம் ஹைதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் மற்றும் அமீர்பேட்டை ஆகிய இடங்களில் அலுவலகத்தை அமைத்துள்ளது. பின்னர் டிஜிட்டல் மயமாக்கும் வேலை என்றும் வீட்டில் இருந்தபடி இந்த வேலை செய்யலாம், இதற்கு அதிக வருமானம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளது.
இதை நம்பி ஏராளமானோர் வேளைக்கு சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு சில ஆங்கில நாவல் புத்தகங்களின் பிரதிகளை பிடிஎப் வடிவத்திற்கு மாற்ற வேண்டும் என்ற பணியை அந்த நிறுவனம் கொடுத்துள்ளது. நிறுவனத்திடம் சுமார் 5,30,000 முக்கிய ஆவணங்கள் இருப்பதாகவும் அவை பிடிஎப் வடிவத்திற்கு மாற்றப்பட வேண்டும் என நிறுவனம் கூறியுள்ளது. மேலும், 2027ஆம் ஆண்டு வரை பணி இருக்கும் என்றும் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு நிறுவனம் வாக்குறுதி அளித்துள்ளது.
இதை அனைத்தையும் நம்பியவர்களிடம், பணியில் சேர ரூ 5.5 லட்சம் பாதுகாப்பு வைப்புத்தொகை வாங்கிய இந்த நிறுவனம் அது 6 மாதத்தில் திரும்பக்கொடுக்கப்படும் என்றும் உறுதி கூறியுள்ளது. கொரோனா காரணமாக பலர் வேலை இழந்த நிலையில், இந்த நிறுவனத்தில் பலர் வேளைக்கு சேர்ந்துள்ளனர்.
ஆரம்பத்தில் அப்படி சேர்ந்தவர்களுக்கு 'பிடிஎஃப் நகல்களை பென் டிரைவரில் சேமித்து கொடுக்க வேண்டும் என்ற பணி வழங்கப்பட்டு ஒரு பக்கத்துக்கு ஐந்து ரூபாய் என்ற அளவில் தொகை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சில நாட்களில் இது நிறுத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ஆறு மாதம் கழித்து திருப்பி தருவதாக கூறப்பட்ட வைப்புத்தொகையை குறித்தும் நிறுவனம் தரப்பில் ஏதும் கூறப்படவில்லை. இது தொடர்பாக நிறுவனத்தை பலமுறை தொடர்பு கொண்ட நிலையில், பதில் ஏதும் வராததால், தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தில் வேலை பார்த்தவர்கள் புகார் அளித்துள்ளனர். .
பல மாதங்களாக ஊழியர்களுக்கு அந்நிறுவனம் சம்பளம் செலுத்தவில்லை என்றும் அதன் உரிமையாளர் அமித் சர்மா என்பவர்தலைமறைவாகியுள்ளார் என்றும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 600 பேர்களிடம் வைப்புத்தொகை வாங்கி ஏமாற்றிய வகையில் ரூ.30 கோடி மோசடி செய்ததாகவும் பல மாத சம்பள பாக்கி இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த மோசடி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.