கர்நாடகம் மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில் கெரூர் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள பேருந்து நிலையத்தில் நேற்று மாலை நின்றுகொண்டிருந்த பெண் ஒருவரை, அங்கிருந்த சிலர் கேலி செய்ததாக கூறப்படுகிறது. அதனடிப்படையில் அருண் மற்றும் லட்சுமணன் என்ற இருநபர்கள் யாசின் என்பவரை கண்டித்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபமடைந்த யாசின், சுமார் 15-க்கும் மேற்பட்ட தனது நண்பர்களுடன் வந்து அருண் மற்றும் லட்சுமணனை தாக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து அருணும் தனது நண்பரகளை அழைக்க அவர்களும் அங்கு வர இரு தரப்பினருக்கு இடையே பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும் இருவரும் வெவ்வேறு சமுகத்தை சார்ந்தவர்கள் என்பதால் இதனை பிரிவினை வாத கலவரமாக மாற்ற சிலர் முயன்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இருக்கும்பலும் தாக்குதல் நடத்திக்கொண்டே அங்கிருந்த மார்க்கெட்டிற்குள் சென்றனர். மேலும் அவர்களுடன் சேர்ந்து சில மர்மகும்பலும் மார்க்கெட்டிற்குள் புகுந்ததால், அங்கிருந்த கடைகள் சூறையாடப்பட்டு, தள்ளு வண்டிகளுக்கு தீ வைத்ததோடு மட்டுமல்லாமல் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திற்கும் தீ வைக்கப்பட்டது. மேலும் இந்த தாக்குதலில் 3 பேருக்கு கத்திக்குத்து ஏற்பட்டு, அவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த வன்முறை சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த அந்த பகுதி காவல்துறையினர், மோதிக்கொண்ட இரு பிரிவினர்களில் 18 பேரை கைது செய்துள்ளனர். மேலும் வன்முறையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட காவல் அதிகாரிகள், கெரூர் நகரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது. அதோடு அந்த பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வன்முறையில் ஆர்.எஸ்.எஸ்.-ன் கீழ் இயங்கும் 'இந்து ஜாகரன வேதிகே' என்ற இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர்களும் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் உலகளவில் சர்ச்சையான நிலையில், மீண்டும் மத மோதலைகள் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.