‘ஜனநாயக சொற்பொழிவு, அதிகார மறுசீரமைப்பு, இந்திய கூட்டாட்சியின் புதிய அமைப்பு’ என்ற தலைப்பில் இந்தியா டுடே 'கான்க்ளேவ் ஈஸ்ட்' என்ற நிகழ்ச்சி ஒன்றை நடத்திவருகிறது.
இந்த நிகழ்ச்சியில், மேகாலயா முதல்வர் கான்ராட் கே சங்மா, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, வங்காள ஆளுநர் ஜக்தீப் தன்கர், நடிகர் ராஜ்குமார் ராவ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி "அடிமட்ட மட்டத்தில் உள்ள மக்களுக்காக உண்மையில் போராடுபவர்களைக் குறிக்க மட்டுமே பாஜக வாரிசு அரசியல் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறது. அமித்ஷாவின் மகன் பிசிசிஐ-யின் தலைவராக இருக்கிறார். ஆனால் அதை பற்றி அவர்கள் பேசுவதில்லை" எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், அடுத்த தேர்தல்களில் மக்கள் வாக்களிப்பது ஒரு கட்சியைத் தேர்ந்தெடுப்பதற்காக அல்ல, மாறாக பாஜகவை நிராகரிக்கவே. உங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் ஜனநாயகத்தை புல்டோசர் மூலம் சிதைக்கலாம். ஆனால் இந்த நாட்டின் மக்கள் ஜனநாயக வழிமுறைகளைப் பயன்படுத்தி உங்களை புல்டோசர் செய்வார்கள்" எனக் கூறினார்.
ஒன்றிய இணையமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா உலகின் பணக்கார அமைப்புகளில் ஒன்றான பிசிசிஐ-யின் தலைவராக இருக்கிறார். இத்தனைக்கும் அமித்ஷாவின் மகன் கிரிக்கெட் தொடர்பாக எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை.
அமித்ஷா ஒன்றிய அமைச்சரான சில வருடங்களில் அதிகாரம் மிக்க பிசிசிஐ-யின் தலைவராக ஜெய்ஷா நியமிக்கப்பட்டார். இது தவிர பாஜகவின் முக்கிய தலைவர்களின் மகன்களும் அரசியலில் எம்.பி. எம்.எல்.ஏ மற்றும் அமைச்சராக செயல்பட்டு வருகிறார்கள். இது குறித்து பாஜக பேசாதது அரசியலில் சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளது.