நேற்று குஜராத் மாநிலம் காண்ட்லாவிலிருந்து மும்பைக்கு ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் க்யூ-400 ரக விமான ஒன்று சென்றுகொண்டிருந்தது. விமானம் 23,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது அதன் பக்கவாட்டு கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது. இதனால் பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து அந்த விமானம் மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதேப்போல, டெல்லியில் இருந்து மும்பை வழியாக 138 பயணிகளுடன் துபாய் சென்ற போயிங் 737 என்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் பாகிஸ்தான் மேல் பறந்துகொண்டிருந்தது. அப்போது, இடது புற இறக்கையில் , எரிபொருள் கசிவு இருப்பதாக விமானிக்கு குறியீடு காட்டியுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த விமானி, பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தை தொடர்புகொண்டு அவசர தரையிறக்கத்துக்கு அனுமதி கேட்டார். அதன் படி அனுமதி தரப்பட கராச்சி விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
பின்னர் நடைபெற்ற சோதனையில், எரிபொருள் டேங்கில் எந்தவெளிப்புற கசிவும் இல்லை என்பதும், இண்டிகேஷன் லைட்டில் ஏற்பட்ட கோளாரே இதற்க்கு காரணம் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து மும்பையில் இருந்து மாற்று விமானம் அனுப்பப்பட்டு பயணிகள் துபாய்க்கு அனுப்பப்பட்டனர்.
கடந்த மூன்று வாரங்களுக்குள் ஸ்பைஸ்ஜெட்டில் ஏழாவது முறை பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே விமான பணியாளர்களின் நடத்தை ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் மேல் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் விமானத்தில் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது அந்நிறுவத்தின் மதிப்பை குறைப்பதாக அமைந்துள்ளது.