பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து பழங்கால நகரங்களின் பெயரை தொடர்ந்து மாற்றி வருகிறது. மேலும் நாட்டின் பல்வேறு நகரங்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என கூறி வருகிறது. உத்தரபிரதேசத்தின் பிரசித்திபெற்ற அலகாபாத் என்ற நகரின் பெயரை பிரயாக்ராஜ் என மாற்றியது. மேலும் பல்வேறு தெருக்கள் மற்றும் சிறிய நகரங்களின் பெயரை மாற்றியது.
இந்த நிலையில் பா.ஜ.கவின் தேசிய செயற்குழு கூட்டம் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, ஹைதராபாத் நகரை பாக்யநகர் எனக் குறிப்பிட்டார்.
மேலும், 2020 ஆம் ஆண்டு, ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலின் போது பா.ஜ.க வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்த உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், "ஹைதராபாத்தின் பெயரை பாக்யநகராக மாற்ற" பாஜகவுக்கு வாக்களிக்குமாறு கூறியிருந்தார்.
அதே போல ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் பல ஆண்டுகளாக ஹைதராபாத் நகரை பாக்யநகர் எனக் குறிப்பிட்டு வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடியின் இந்த பேச்சு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் பிரதமர் மோடி பேசியவை தற்போது பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. நாடு முழுவதுமிருந்து வந்திருந்த பா.ஜ.கவினர் மத்தியில் பேசிய மோடி, தெலங்கானா தலைநகரை பாக்யநகர் எனக் குறிப்பிட்டார்.
இதேபோல ஹைதராபாத்தின் பெயர் பாக்யநகர் என மாற்றப்படுமா என்ற கேள்விக்கு, ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல், “மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும். அமைச்சரவை சகாக்களுடன் சேர்ந்து முதலமைச்சர் முடிவு செய்வார்” என கருத்து தெரிவித்தார்.
'அலகாபாத்' என்ற நகரின் பெயரை 'பிரயாக்ராஜ் ' என மாற்றியபோது அதற்கு அந்த நகர மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும் நகரின் பெயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஹைதராபாத் மக்கள் கூறாத நிலையில், அரசியல் ஆதாயம் கிடைக்கும் என பா.ஜ.க இதுபோன்று கூறிவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மோடியின் கருத்துக்கு தெலுங்கானா மாநிலத்தில் பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.